மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்

மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-03-24 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தமிழ்நாடு அனைத்து மலைக்குறவன் பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில தலைவர் பூராசாமி, பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோரின் உத்தரவின் பேரில், சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, பொருளாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் விரைவில் நடத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் கூடி சங்க மாநாடு நடத்த வேண்டும். முன்னாள் பழங்குடி இயக்குனர் டாக்டர் ஜக்காபார்த்தசாரதி அரசுக்கு அளித்த கடிதம் மூலம் மலைக்குறவன் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

வழிவகை செய்திட வேண்டும்

பூர்வீக மலைக்குறவன் இன மக்களின் வாழ்க்கை கலாசாரத்தை இனங்கண்டு மலைக்குறவன் சான்று வழங்கிட வேண்டும். மலைக்குறவன் சாதி சான்று வைத்து உள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திடவேண்டும். மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ள ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கும் மலைக்குறவன் சாதி சான்று பெற்றிட வழி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்