வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் பணிமனையில் நிறுத்தம்

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, காரைக்குடியில் நேற்று மாலை முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டன.

Update: 2020-03-24 21:30 GMT
சிவகங்கை, 

இ்ந்திய மக்களிடம் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் ஒரு வார காலத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேற்று காலை முதல் கடைகளுக்கு சென்று வாங்கினர்.

மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். ஒரு வார காலம் பஸ்கள், ரெயில்கள் இயங்காது என அறிவித்ததால் அவர்கள் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர். இதனால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மாலை நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டது. இதுதவிர கடந்த சில நாட்களாக பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்கின்றனர். மேலும் வர்த்தக நிறுவனம், ஓட்டல்கள், திரையரங்குகள், பூங்கா உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டதால் பகல் நேரத்தில் மாவட்டம் முழுவதும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதுதவிர மருத்துவமனைக்கு தங்களது உடல் நிலை குறித்து பரிசோதனைக்காக வருபவர்களை ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்கும் வகையில் கட்டம் வரையப்பட்டு அதில் நீண்ட வரிசையாக நிற்க வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் நேற்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு இறுதி நாள் ஆகும். இதையடுத்து தேர்வு எழுத வந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பு தங்களது கைகளை நன்றாக கழுவிய பின்னரே தேர்வு எழுத சென்றனர். அவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்ததும், கோடை விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்னும் சில மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் 144 உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து நேற்று முதல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர்.

மேலும் செய்திகள்