144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

Update: 2020-03-24 22:00 GMT
ராமநாதபுரம்,

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பலரை பலிவாங்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க மக்களை தனிமைப்படுத்தி வாழ பழகிக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. தனித்து வாழ்வதே நோயில் இருந்து தற்காத்து கொள்ள வழி என்பதால் மக்களும் விழிப்புணர்வுடன் தனித்திருப்பதோடு தன்சுத்தம் பேணி கைகழுவுதல் போன்றவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில எல்லைகள் மூடப்பட்ட நிலையில் மாவட்ட எல்லைகளை மூடி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கான காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் வருகிற 31-ந் தேதி வரை அடைக்க உத்தரவிடப்பட்டது. அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்தநிலையில் 144 தடை உத்தரவு காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது என்று அரசு உத்தரவாதம் அளித்திருந்தாலும், நேற்று காலை முதல் நகரில் உணவு பொருட்கள், காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இதன் காரணமாக ராமநாதபுரம் நகரில் சாலைத்தெரு, அரண்மனைவீதி, பெரிய பஜார், வண்டிக்காரத்தெரு ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் பைகளை எடுத்துக்கொண்டு காய்கறிகள், பலசரக்கு பொருட்களை வாங்கி கொண்டு செல்வதை காணமுடிந்தது. இதனால் வியாபாரிகள் சிலர் பொருட்களை 2 மடங்கு விலை வைத்து விற்பனை செய்தனர்.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இருந்தாலும் வேறு வழியின்றி மக்கள் வியாபாரிகள் சொன்ன விலைக்கு வாங்கி சென்றனர். அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதை கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்தும், எந்த பயனும் இன்றி பொருட்களின் விலை 2 மடங்காக அதிகரித்து விற்கப்பட்டது.

ஒருபுறம் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், மறுபுறம் குடியிருப்புகள் உள்ள தெருக்களில் அச்சம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாததால் நிசப்தமாக காட்சி அளித்தது.

மேலும் செய்திகள்