செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2020-03-24 22:15 GMT
கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று காலை பேரூராட்சி மன்ற சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பஸ் நிலையம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, கழிவறை உள்பட அனைத்து இடத்திலும் கிருமி நாசினி தெளித்தனர்.

பஸ் நிலையத்தின் உள்ளே நுழையும் அனைத்து அரசு, தனியார் பஸ்களுக்கும் டயர்களில் கிருமி நாசினி தெளித்தனர். இது போல அரசு பள்ளிக்கூடங்கள், தாசில்தார் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பதிவாளர் அலுவலகம், வங்கிகள், ஏ.டி.எம். எந்திரம் உள்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பேரூராட்சி அலுவலகத்துக்குள் பொதுமக்கள், கைகளில் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தபின் அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வேலாயுதம், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பாண்டியன் குமார் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி, பேரூராட்சி மேலாளர் ஆர்.சக்தி குமார் மற்றும் ஊழியர்கள் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளையும் மற்றும் வீட்டில் வசிப்பவர்களின் உடல் நலம் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க விழிப்புணர்வுகளை வழங்கியும் வீட்டினில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறையும் அவ்வப்போது தெரிவிக்கும் அறிவிப்புகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் எனவும் கூறினர்.

மேலும் செய்திகள்