கொரோனா வைரஸ் எதிரொலி: பரமக்குடியில் 13 பேர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

கொரோனா வைரஸ் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து பரமக்குடிக்கு வந்துள்ள 13 பேர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

Update: 2020-03-24 22:15 GMT
பரமக்குடி, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பரமக்குடியில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பரமக்குடி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் உத்தரவின்படி அத்தியாவசிய பொருட்கள், உணவகங்கள், மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி அறிவுறுத்தி வருகின்றனர்.

நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவற்காக கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து சில தினங்களுக்கு முன்பு பரமக்குடிக்கு வந்த 13 பேரை கண்டறிந்து அவர்களின் வீடுகளில் நகராட்சி சார்பில் அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வீடுகள், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினிகள், காலை, மாலை என இருவேளைகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் பகுதியில் அம்மா உணவகம் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது. உத்தரவுகளை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்