கொரோனாவால் 31-ந் தேதி வரை மூடல்: டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள் கூட்டம் - சாக்கு, பெட்டிகளில் வாங்கிச்சென்றனர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 31-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. சாக்கு, பெட்டிகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

Update: 2020-03-24 22:30 GMT
கடலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால் கடலூரில் இல்லத்தரசிகள் நேற்று அதிகாலையில் இருந்தே சுறுசுறுப்பாக செயல்பட்டனர். மார்க்கெட்டுகளுக்கு சென்று ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட் களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர். இல்லத்தரசிகளை விஞ்சும் அளவிற்கு சில மதுபிரியர்களும் ஒரு வாரத்துக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி குவித்த ருசிகர சம்பவம் நடந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-

144 தடை உத்தரவால் வருகிற 31-ந்தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்குவதற்காக கடலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை விற்பனையாளர்கள் திறந்தனர். உடனே மதுபிரியர்கள் போட்டிபோட்டு மதுபாட்டில்களை வாங்கினர். அந்த மதுபாட்டில்களை பைகள், சாக்கு, பெட்டிகளில் அடுக்கி வைத்து, அதனை தோளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வைத்து எடுத்து சென்றதை காண முடிந்தது. இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில், தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை. இப்படியே பழகி விட்டோம். கொரோனாவால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். எனவே ஒரு வாரத்துக்கு தேவையான மதுபாட்டில் களை வாங்கி, இருப்பு வைக்கிறோம். தினமும் தேவைக்கு தகுந்தாற்போல் குடிப்போம் என்றனர். 

மேலும் செய்திகள்