காரமடையில் சூறாவளி காற்றுடன் கனமழை: 1000 வாழைகள் முறிந்து சேதம் - விவசாயிகள் கவலை

காரமடையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால், 1000 வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2020-03-24 22:15 GMT
காரமடை,

கோவை மாவட்டம் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை, கறிவேப்பிலை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வாழை சாகுபடி நடக்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுங்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த பகுதியில் இன்னும் சில நாட்களில் வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் இரவு நேரத்தில் உஷ்ணம் அதிகமாக காணப்பட்டது.

கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் காரமடை, தொட்டிபாளையம் திம்மம்பாளையம், புங்கம்பாளையம், சின்ன தொட்டிபாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்