கடலூர் உழவர் சந்தை அடைப்பு: சாலையோரம் வைத்து விற்பனை செய்த விவசாயிகள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கடலூர் உழவர் சந்தை அடைக்கப்பட்டதால் விவசாயிகள் சாலையோரம் வைத்து விற்பனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

Update: 2020-03-24 22:00 GMT
கடலூர்,

கடலூரில் இம்பீரியல் சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை இந்த உழவர் சந்தைக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு நேரிடையாக விற்பனை செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஏராளமான விவசாயிகள் வழக்கம்போல் காய்கறி உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக உழவர் சந்தைக்கு வந்திருந்தனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் உழவர் சந்தையை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

அதன்படி நேற்று காலை அதிகாரிகள் உழவர் சந்தையை அடைத்தனர். இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்கள் உழவர் சந்தை முன்பு சாலையோரம் வைத்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை விற்பனை செய்தனர்.

இதனிடையே மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதால், ஏராளமானோர் உழவர் சந்தைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி விட்டு, காய்கறிகள், வாழை தார்கள் உள்ளிட்டவற்றை போட்டிப்போட்டு வாங்கிச் சென்றனர். விவசாயிகள் சாலையோரம் கடைகள் அமைத்திருந்ததாலும், பொதுமக்கள் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியதாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உழவர் சந்தையை அடைப்பது குறித்து முன்கூட்டியே விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் நேற்று காலை உழவர் சந்தையை அடைத்ததும், விவசாயிகளை சாலையோரம் நின்று விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கலாம். இல்லையெனில் பொதுமக்கள் சாலையில் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்ய சிறிது நேரம் காலஅவகாசம் கொடுத்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் உழவர் சந்தை முன்பு வைத்து விவசாயிகள் விற்பனை செய்வதை கண்டு கொள்ளவில்லை. இதனாலேயே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்றனர்.

மேலும் செய்திகள்