144 தடை உத்தரவு அமல்: நீலகிரி மாவட்டம் வெறிச்சோடியது

144 தடை உத்தரவு அமலானதால் நீலகிரி மாவட்டம் வெறிச்சோடியது.

Update: 2020-03-25 22:15 GMT
ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் செயல்பட்டன.

ஊட்டி மத்திய பஸ் நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகங்கள் இயங்கின. அங்கு முகக்கவசம் அணிந்து பணியாளர்கள் சமையல் செய்து, உணவுகளை வினியோகித்தனர். பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. ஆனால் ஏ.டி.எம். மையங்கள் திறந்து இருந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் வந்து சென்றனர். பாம்பேகேசில், எல்க்ஹில் பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க வந்தனர்.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழந்தையுடன் பெற்றோர்கள் வருவதை காண முடிந்தது. குடும்பத்தில் ஒருவர் வந்து வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அங்கு போலீசார் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 18 நுழைவு வாயில்களில் 16 நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. ஆவின் பால் விற்பனை நிலையங்கள் செயல்பட்டது. 144 தடை உத்தரவால் நீலகிரியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி உள்ளது.

ஊட்டி மத்திய பஸ் நிலையம், ராஜீவ்காந்தி ரவுண்டானா, ஏ.டி.சி. பஸ் நிலையம், சேரிங்கிராஸ், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. அதனால் வெறிச்சோடிய நிலையில் இருக்கிறது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழக்கம்போல் இயங்கின.

கோத்தகிரியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் மற்றும் பொது இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சாலை வழியாக அவசர தேவைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், கண்காணிப்பு அலுவலரான தோட்டக்கலை உதவி அலுவலர் சந்திரன் ஆகியோர் தலைமையில் முழு உடல் கவசமணிந்த தூய்மை பணியாளர்கள் மார்க்கெட், தாசில்தார் அலுவலக வளாகம், பஸ் நிலையம், கடைகள், சாலைகள் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று கூடலூர், குன்னூர், மஞ்சூர், பந்தலூர் பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி ெவறிச்சோடி காணப் பட்டன.

மேலும் செய்திகள்