கடையநல்லூரில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 10 பேர் கைது

கடையநல்லூரில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-25 22:45 GMT
அச்சன்புதூர்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வானுவர் தெருவை சேர்ந்த சைபுல்லா (வயது 60) என்பவர் 144 தடை உத்தரவை மீறி பஜார் சாலையில் சுற்றித் திரிந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அவரை கைது செய்தார்.

இதேபோல் அரியநாயகிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிச்சாண்டி (57), கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகைதீன் (57), காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி (37), திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அசன் (59), கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் வினோத் (28), இடைகால் படையாச்சி தெருவை சேர்ந்த இளங்கோ மகன் கனகசபாபதி (22) ஆகியோரும் தடை உத்தரவை மீறி கடையநல்லூர் பஜார் ரோட்டில் சுற்றித் திரிந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சுரண்டை அருகே பங்களா சுரண்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் பால்ராஜ் (24). இவர் நேற்று காலையில் அரசு அறிவித்திருக்கும் 144 தடை உத்தரவை மீறி பங்களா சுரண்டை மெயின் ரோடு பகுதியில் மோட்டார்சைக்கிளில் சுற்றித் திரிந்தார். சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

சொக்கம்பட்டி பகுதியில் தடையை மீறி சாலையில் சுற்றித்திரிந்த அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சங்கர் (40), திரிகூடபுரத்தைச் சேர்ந்த மாரித்துரை (28) ஆகிய 2 பேரை சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி வழக்குப்பதிந்து கைது செய்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 10 பேரும் எச்சரிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வரும் நாட்களில் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிகின்ற நபர்கள் கைது செய்யப்பட்டு செங்கோட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என கடையநல்லூர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்