21 நாள் ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா நகரமான மாமல்லபுரம் முடங்கியது - சாலைகள் வெறிச்சோடின

மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவால் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் மக்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகன போக்குவரத்து இல்லாமலும் அடியோடு முடங்கியது.

Update: 2020-03-25 22:30 GMT
மாமல்லபுரம், 

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பிரதமர் நரேந்திரமோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமலும் அரசு பஸ்கள், வாகன போக்குவரத்து இல்லாததாலும் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேபோல் அனைத்து புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளிலும் பயணிகள், உள்ளூர் மக்கள் நடமாட்டம் இல்லாததால் ஒரு அமைதி நிலவி வருகிறது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மாமல்லபுரம் நகருக்குள் வாகனங்கள் வராமல் இருக்க முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அனைத்து உணவு விடுதிகள், நட்சத்திர விடுதி, பண்ணை விடுதிகள் மூடப்பட்டன. பார்சல் மட்டும் வாங்கலாம் என்ற விதிமுறையில் ஒரு சில ஓட்டல்கள் திறக்கப்பட்டாலும் வாடிக்கையாளர் வருகையின்றி உணவகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

அனைத்து சிற்ப கலைக் கூடங்களும் மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாமல்லபுரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

குறிப்பாக மாமல்லபுரத்தில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டாலும் மக்கள் தெருக்களில் நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்து ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்