காய்கறி, மளிகைக்கடைகள் திறந்திருந்தன: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வேலூர் மாநகரம்

144 தடை உத்தரவு காரணமாக வேலூர் மாநகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர்.

Update: 2020-03-25 22:15 GMT
வேலூர், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்று காலை வேலூர் மாநகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. லாங்குபஜார், கிருபானந்தவாரியார் சாலை, மெயின்பஜார், சாரதிமாளிகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதனால் அந்த சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. கார், மோட்டார் சைக்கிள்கள் செல்வதை காணமுடிந்தது.

வேலூரில் மளிகை, மருந்து, காய்கறிக்கடைகள் திறந்திருந்தன. காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கவும், இறைச்சி, மீன்வாங்கவும் ஏராளமான பொதுமக்கள் சென்றனர். மீன்மார்க்கெட்டில் பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று மீன், இறைச்சி வாங்க தரையில் கோடுகள் போடப்பட்டிருந்தது.

மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தடை உத்தரவை அமல்படுத்தவும் 52 போலீஸ் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. வேலூர் நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.

தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். சிலரை விரட்டியடித்தனர். வேலூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டிருப்பதையும், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதையும் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் பழைய, புதிய பஸ்நிலையங்கள் மற்றும் சாலையோரங்களில் இருந்த ஆதரவற்றோருக்கு, தன்னார்வலர்கள் உணவு வழங்கினார்கள். வேலூர் மாவட்ட சமூகநலத்துறை சூப்பிரண்டு ஜோசப் ஆரோக்கியதாஸ் தலைமையிலான குழுவினர் வேலூர் மாநகரில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 15 பேரை மீட்டனர்.

பின்னர் அவர்கள் காகிதப்பட்டரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். 15 பேருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளின் முன்பாக பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும் அதன்படி செயல்பட பொதுமக்களை கடைக்காரர்கள் அறிவுறுத்த வேண்டும். தரையில் கோடுகள் போடாமல் பொருட்கள் வழங்கும் கடைகள் மூடப்படுவதோடு, கடை உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவை மீறி இயங்கும் கார், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்