10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா பாதிப்பு

மும்பையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-26 00:06 GMT
மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நாட்டின் நிதி தலைநகரான மும்பை பெருநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60-ஐ தாண்டி உள்ளது. இதில் தென்மும்பை பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் படித்து வரும் அந்த 15 வயது மாணவன், தென்மும்பையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொது தேர்வை எழுதி உள்ளான். இதையடுத்து மாநகராட்சி கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மாணவனுடன் தேர்வறையில் நெருங்கிய தொடர்பில் இருந்த 36 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி இணை கமிஷனர் அசுதோஷ் சாலில் கூறுகையில், ‘‘10-ம் வகுப்பு மாணவனின் தந்தை துபாயில் இருந்து வந்துள்ளார். அவரிடம் இருந்து மாணவனுக்கு கொரோனா பரவி உள்ளது. அவனுடன் தேர்வு எழுதிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.

இதில் முதல்கட்டமாக மாணவனுடன் தேர்வு எழுதிய 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்