திண்டுக்கல் நகரில், 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் - நாளை முதல் செயல்படுகிறது

திண்டுக்கல் நகரில் 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது.

Update: 2020-03-25 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தடுப்பதற்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை நமது மாவட்டத்துக்குள் நுழைய விடக்கூடாது.

வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வருவோரை மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து உணவு, தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குடும்பத்துடன் வருவதை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே பழனி சாலையில் லாரிபேட்டை, மேட்டுப்பட்டி பாஸ்கு மைதானம், நாகல்நகர் பாரதிபுரம் சந்தை, ரவுண்டு ரோடு எஸ்.எம்.பி.எம். பள்ளி அருகில் ஆகிய 4 இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தற்காலிக காய்கறி சந்தை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்