144 தடை உத்தரவுக்கு முன்பு குமரியில் 6 மணி நேரத்தில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை - வழக்கமான நாட்களை விட இருமடங்கு அதிகம்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு குமரி மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் ரூ.6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

Update: 2020-03-25 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் மதுபானங்கள் விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் டாஸ்மாக் நிறுவனம் 113 மதுபான கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைகள் தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 113 கடைகள் மூலம் சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடிக்கு மது விற்பனை நடந்து வருகிறது.

விழாக்காலங்கள், பண்டிகை காலங்களில் இந்த விற்பனை அதிகரிப்பது வழக்கம். அந்த மாதிரியான நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி வரை விற்பனை நடைபெறும்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 24-ந் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது என்றும், டாஸ்மாக் கடைகள் 24-ந் தேதி மாலை 6 மணியுடன் மூடப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து மாலை 6 மணி வரை மும்முரமாக வியாபாரம் நடைபெற்றது. இதனால் மதுபான பிரியர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததால் பலர் மதுபான பாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்றனர். இதனால் பல கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன. எனினும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் குடோனில் இருந்து மதுபாட்டில்களை வரவழைத்து விற்பனை செய்தனர். சில கடைகளில் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தபிறகும் கூட்டம் இருந்தது. இதனால் கடைக்காரர்கள் கடையை பூட்ட முயன்றபோது எப்படியும் மதுபாட்டில்களை வாங்கிச்செல்வது என்ற முடிவில் இருந்த ‘குடி‘மகன்கள் கடை விற்பனையாளர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி மதுபானங்களை வாங்கிச்சென்றதையும் காணமுடிந்தது.

அதன்படி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணி நேரத்தில் எப்போதும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் ரூ.5 கோடியே 84 லட்சத்து 76 ஆயிரத்து 550-க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருந்தது. வழக்கமான நேரத்தை போல இரவு 10 மணி வரை விற்பனை நடைபெற்றிருந்தால் மேலும் இரண்டு, மூன்று கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கும். இது வழக்கமான நாட்களை விட இருமடங்கு மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்