கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க - அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகளுடன் தனிபிரிவு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கைகள் கொண்ட தனிபிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-26 05:52 GMT
புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி கோரிமேடு காசநோய் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனி படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்பேரில் புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவ பிரிவு தொடங்கப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், செயலாளர் பிரசாந்த்குமார் பாண்டா, மாவட்ட கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் ஆகியோர் நேற்று அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 700 படுக்கைகள் உள்ளன. புதிதாக தற்போது 8 வெண்டிலேட்டர்கள் (செயற்கை சுவாச கருவி) வாங்கப்பட்டுள்ளன. அவற்றை பொருத்தும்பணி நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக ரூ.5½ கோடி செலவில் மேலும் 25 வெண்டிலேட்டர்கள் வாங்கப்படும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை தேவையிருக்கும் வரை இந்த சிறப்பு பிரிவு செயல்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கண்டிப்பாக வெண்டிலேட்டர் தேவை. தற்போது புதுவை அரசு தரப்பில் 45 வெண்டிலேட்டரும், ஜிப்மரில் 65 வெண்டிலேட்டரும், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 75 வெண்டிலேட்டரும் உள்ளன. அத்துடன் புதிதாக 3 வெண்டிலேட்டர் வாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கி தந்துள்ளார்.

ஆந்திரா, தெலுங்கானா முதல்-அமைச்சர்களிடமும் உதவி கோரியுள்ளோம். மேலும் புதுவையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் உதவி கேட்டுள்ளோம். அவர்களும் உதவி செய்ய தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வை முடித்து விட்டு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அங்கு பணியாற்றும் டி. பிரிவு ஊழியர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்டோர் அவரை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர், நாடு முழுவதும் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து தற்போது பேச வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அருணிடம் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர் உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் என்று தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்