கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு: அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறப்பு - இடைவெளி விட்டு வரிசையில் நின்ற மக்கள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து இருந்தன. மக்கள் இடைவெளிவிட்டு வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கினர்.

Update: 2020-03-26 22:30 GMT
தேனி,

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தேனி மாவட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 24-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து அமலில் உள்ளது. இதனால், பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் தேனியில் ஓரிரு மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

இந்நிலையில், நேற்று நகரில் 50-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து இருந்தன. அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை வாங்குவதற்கு தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தேனிக்கு மோட்டார் சைக் கிள்களில் வந்து சென்றனர்.

தேனி கடற்கரை நாடார் தெருவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து இருந்தன. கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். அத்துடன் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்து, வரிசையில் காத்திருந்தனர்.

தேனியில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நேரு சிலை சிக்னல் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் மக்கள் இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கினர். மருந்தக ஊழியர்கள் மக்களின் கைகளில் கிருமி நாசினி திரவத்தை வழங்கி கைகளில் தடவிக் கொள்ளுமாறு கூறினர். அதன்பிறகே கடைக்குள் அனுமதித்தனர்.

அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறை தூய்மை பணியாளர்கள், மருத்துவக்குழுவினர் ஆகியோர் பயணம் செய்வதற்கு மட்டும் காலை மற்றும் மாலை நேரத்தில் மாவட்டத்துக்குள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மற்றபடி பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்