கொரோனா அச்சம் எதிரொலி: முக கவசம் அணிந்து எளிமையாக நடந்த திருமணங்கள்

கொரோனா அச்சம் எதிரொலியாக ராமநாதபுரத்தில் திருமணங்கள் எளிமையாக நடந்தன. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.

Update: 2020-03-26 21:00 GMT
ராமநாதபுரம், 

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் இந்த உத்தரவினை மீறி வெளியில் செல்பவர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை எச்சரித்தும், வழக்குபதிவு செய்தும் போலீசார் 144 தடை உத்தரவினை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இன்னும் சில போலீசார் விதிகளை மீறி வெளியில் சுற்றித்திரிந்த நபர்களை கண்டித்து தோப்புக்கரணம் போடச்சொல்லி எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல திருமணங்கள் அவரவர் குடும்பத்தினரை மட்டும் வைத்து நடத்தப்பட்டது. ஒரு சில உறவினர்கள் வந்து கலந்து கொண்டு உடனடியாக திரும்பி சென்றனர். ஒருமணி நேரத்திற்குள் அனைத்து நிகழ்வுகளையும் முடித்து கொண்டனர். விழாக்களில் கலந்து கொண்டவர்கள் மணமக்கள் உள்பட முக கவசம் அணிந்து இருந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக மருந்து கடைகளில் முக கவசம் மற்றும் மருந்துகள் வாங்க அதிக அளவில் மக்கள் திரண்டனர். அவர்கள் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர். ராமநாதபுரம் நகரில் உள்ள ரேஷன்கடைகளில் நேற்று மண்எண்ணை வினியோகத்தின் போது, பிளீச்சிங் பவுடரால் இடைவெளி கட்டம் போடப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அதற்குள் வரிசையாக வந்து வாங்கி சென்றனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் ராமநாதபுரம் அருகே அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனி வார்டு தயாராகி வருகிறது. இதில் எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்றும், தங்க வைப்பதற்காக தயாராகிறதா? என்றும் தெரியவில்லை. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மாவட்டத்தை சேர்ந்த 34 மீனவர்கள் மங்களூருக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் நேற்று காலை அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். இவர்களை மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனைவரையும் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைத்துள்ளனர். 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து பாதிப்பு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்