ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் சுற்றித்திரிந்த 12 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் சுற்றித்திரிந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-26 22:45 GMT
மதுரை, 

மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறி நகரில் வலம் வந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. அங்கு சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தவிர நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் உள்ளனர். அப்போது சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிலர் தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் நகரில் வலம் வருகிறார்கள். அவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்தும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தும், ஒரு சிலரை தோப்புகரணம் போடவைத்து போலீசார் தண்டனை விதித்து அனுப்பி வைக்கிறார்கள்.

இவ்வாறு மதுரை நகரில் நேற்று மாலை வரை விதிகளை மீறி நகரில் வலம் வந்ததாக 364 வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். 297 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, 1 லட்சத்து 22 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்