கொரோனா தீவிரத்தை உணராமல் வாகனங்களில் சுற்றித்திரியும் பொதுமக்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்

நெல்லையில் கொரோனா தீவிரத்தை உணராமல் வாகனங்களில் சுற்றித்திரியும் பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Update: 2020-03-26 22:30 GMT
நெல்லை, 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களை கொன்று குவிக்கிறது. இதை தடுக்க பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வீடுகளுக்குள் தனிமையில் இருந்தால் வைரஸ் பரவாமல் தவிர்த்து விடுவதன் மூலம் கொரோனா வைரசை முற்றிலும் தடுக்கலாம். இதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளது.

ஆனால் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். மாவட்ட எல்லைகள் ‘சீல்‘ வைக்கப்பட்டு இருப்பது போல் நெல்லை மாநகரிலும் ஆங்காங்கே உள்ள சந்திப்புகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் மோட்டார் சைக்கிள், கார்களில் அதிகமானோர் வந்து கொண்டே இருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களிடம் கேட்டபோது பெரும்பாலானோர் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறினர். அவர்களை மட்டும் போலீசார் உடனடியாக அனுப்பினர். மற்றபடி வேடிக்கை பார்க்க வந்தவர்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வருவதாக கூறியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர். மேலும் ஒருசில வாகன டிரைவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதுதவிர உடையார்பட்டி தியேட்டர் முன்பு சுற்றித்திரிந்தவர்களை போலீசார் லத்தியால் விரட்டி அடித்தனர்.

நெல்லை வண்ணார்பேட்டை திருவனந்தபுரம் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை கலெக்டர் ஷில்பா அந்த வழியாக வந்தபோது, அவரது காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதைக்கண்ட போலீசார் மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தி கலெக்டர் கார் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்