நெல்லிக்குப்பம் அருகே, ரே‌‌ஷன்கடை சுவரில் துளைபோட்டு பொருட்கள் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லிக்குப்பம் அருகே ரே‌‌ஷன்கடை சுவரில் துளை போட்டு, அத்தியாவசிய பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-03-26 22:00 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் குணமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் ரே‌‌ஷன் கடை உள்ளது. வரக்கால்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் இந்த கடையில் அரவிந்த் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மாலை விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு, அதேபகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மறுநாள் காலை அரவிந்த் வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றபோது, ஒருவர் உள்ளே நுழையும் அளவுக்கு கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஆய்வு செய்தபோது, தலா 50 கிலோ எடை கொண்ட சர்க்கரை மூட்டை, துவரம் பருப்பு மூட்டை மற்றும் தலா ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 33 பாமாயில் பாக்கெட்டுகளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ? நள்ளிரவு நேரத்தில் கடையின் சுவரில் துளை போட்டு கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, அத்தியாவசிய பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரே‌‌ஷன் கடை சுவரில் துளைபோட்டு, அத்தியாவசிய பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்