144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 86 பேர் கைது - 80 மோட்டார்சைக்கிள்கள், கார் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 86 பேரை போலீசார் கைது செய்தனர். 80 மோட்டார் சைக்கிள்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-03-26 22:45 GMT
வேலூர்,

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் 24-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

பால், காய்கறி, மளிகை, மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் யாரேனும் நடமாடுகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், தடை உத்தரவை அமல்படுத்தவும் 52 போலீஸ் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. தடை உத்தரவை மீறி பொதுமக்கள் பலர் வழக்கம்போல் சாலைகளில் சுற்றித்திரிந்தனர்.

சிலர் தடை உத்தரவு நேரத்தில் நகரம், முக்கிய சாலைகள் எவ்வாறு உள்ளது? என்பதை காண மோட்டார்சைக்கிளில் சுற்றித்திரிந்தனர். போலீசார் முக்கிய சாலைகளில் நின்று பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி கூறினார்கள். ஆனாலும் சிலர் தேவையில்லாமல் தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

பின்னர் சொந்த ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் 86 பேர் கைது செய்யப்பட்டனர். 80 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்