ஒடுகத்தூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தை எருக்கம்பால் ஊற்றி கொலை - உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூர தாய் கைது

ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதலில் பிறந்த பெண்குழந்தையை எருக்கம்பால் ஊற்றி கொலைசெய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரத்தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-26 23:00 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கல்லாபாறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). இவருடைய மனைவி ஜெயலட்சுமி (26). இவர்களுக்கு 5 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 வருடங்களாக 2 குழந்தைகளுடன் ஜெயலட்சுமி தனியாக வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஜெயலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயலட்சுமி கர்ப்பமடைந்தார். கடந்த 20-ந் தேதி இரவு வீட்டில் ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததால் அவமானம் ஏற்பட்டது. இதனால் குழந்தையை கொலைசெய்ய ஜெயலட்சுமி திட்டமிட்டார்.

அதன்படி 21-ந் தேதி இரவு குழந்தைக்கு எருக்கம்பால் ஊற்றி கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் சாக்குமூட்டையில் குழந்தையின் உடலை கட்டி எடுத்துச்சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் வீசி உள்ளார். குழந்தை இல்லாததை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தை எங்கே என்று கேட்டதற்கு பதில் கூறாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த சிலர் குழந்தையின் உடல் வீசப்பட்ட கிணற்றின் வழியாக சென்றுள்ளனர். அப்போது கிணற்றில் சாக்குப்பையில் ஏதோ மிதப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

மேலும் கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை மேலேதூக்கி பார்த்தனர். அதில் அழுகியநிலையில் பெண்குழந்தை உடல் இருந்ததை கண்டு அதிச்சியடைந்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை ஜெயலட்சுமி கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்