கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினி - வீடு வீடாக இளைஞர்கள் தெளித்தனர்

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பாகூரில் இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினியை இளைஞர்கள் வீடு வீடாக தெளித்தனர்.

Update: 2020-03-27 05:01 GMT
பாகூர்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் வீடுகளின் முன்பு வேப்பிலை, துளசி செடிகளை கட்டுவது, மஞ்சள்பொடி கலந்த தண்ணீர், இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினி, கோமியம் தெளிப்பது போன்ற தற்காப்பு முறைகளை கடைபிடித்து வருகின்றனர். வீடுகளின் முற்றத்தில் சாணத்தை கரைத்து தெளித்தால் கொரோனா அண்டாது என்ற தகவல் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்து, பலர் தங்களது வீடுகளின் முன்பு சாணத்தை கரைத்து தெளிக்கின்றனர்.

இந்தநிலையில் பாகூரில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இயற்கை முறையில் கிருமிநாசினி தயாரித்து அனைத்து வீடுகளிலும் தெளிக்க முடிவு செய்தனர். அதன்படி மஞ்சள் பொடி 5 கிலோ, வேப்பிலை கரைசல் 100 லிட்டர் ஆகியவற்றை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து இயற்கை முறையில் கிருமிநாசினி தயாரித்தனர். பின்னர் அதனை பேரலில் நிரப்பி மினி லாரி உதவியுடன் விசைத்தெளிப்பான் மூலம் தெரு தெருவாக சென்று ஒவ்வொரு வீட்டின் முன்பு தெளித்தனர்.

பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், இளைஞர்களின் இந்த சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சுஜித் குமார், சூரியபிரபு, முன்னாள் கவுன்சிலர் ருத்ரமூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமநாயக்கர், துணைத்தலைவர் குமாரசாமி மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

பாகூர் முழுவதும் இளைஞர்கள் 4 குழுக்களாக பிரிந்து அனைத்து வீடுகளிலும் கிருமி நாசினி தெளித்தனர். இளைஞர்களின் இந்த சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்