ரேஷன்கடை பெண் ஊழியர் திடீர் சாவு; கொரோனா பீதியால் கடைகளை அடைத்த பணியாளர்கள்

ஈரோட்டில் ரேஷன் கடை பெண் ஊழியர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பீதியால் பணியாளர்கள் கடைகளை அடைத்தனர்.

Update: 2020-03-27 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பலர் கொரோனா தொற்று அச்சம் காரணமாக அவர் இறந்திருப்பதாக தகவல்களை பரப்பியதுடன் தங்கள் கடைகளை அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இங்கு பெண் ஒருவர் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார். காய்ச்சல் தீவிரத்தால் அவர் நேற்று முன்தினம் இறந்ததாக கூறப்படுகிறது.

இறந்து போன ரேஷன்கடை பணியாளர் தினமும் பெருந்துறை பகுதியில் இருந்து கடைக்கு வந்து சென்று உள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரது தாயின் ஊரான கவுந்தப்பாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இறந்தார். இதற்கிடையே அவர் பணியாற்றி வந்த கொல்லம்பாளையம் ரேஷன் கடையையொட்டி உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி கொரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே ரேஷன் கடையின் பெண் ஊழியர் மரணம் குறித்த தகவல் பரவியதும் ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவர் பணியாற்றிய ரேஷன்கடை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியையொட்டி இருந்ததால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.

அதுமட்டுமின்றி பொதுமக்கள் கடைகளுக்கு வருவதால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தால் ஈரோடு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை பணியாளர்கள் மூடினார்கள்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து கடைகளை திறக்க வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்