முத்திரை குத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் சிறையில் அடையுங்கள் - போலீசாருக்கு, மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு

வீடுகளிலேயே தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி முத்திரை குத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் அவர்களை சிறையில் அடையுங்கள் என்று போலீசாருக்கு மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-27 23:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாநில போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள். அவர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள். ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்லும் மக்கள் மீது தடியடி நடத்தாதீர்கள். அவர்களுக்கு தொல்லை கொடுக்காதீர்கள்.

மேலும் வீடுகளிலேயே தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி கைகளில் முத்திரை குத்தப்பட்ட நபர்கள் கண்டிப்பாக அவர்களுடைய வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது. அப்படியே யாரேனும் வெளியே வந்து நடமாடினால் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுங்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடையுங்கள்.

மேலும் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள கர்நாடக ஆயுதப்படை, பெங்களூருவில் உள்ள அதிரடிப்படை போலீசாரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்