பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மதுரையில் கொரோனாவுக்கு பலியான கட்டிட காண்டிராக்டரின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-03-27 23:30 GMT
மதுரை, 

மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதான கட்டிட காண்டிராக்டர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே கொரோனாவால் இறந்த நபர், தமிழகத்தில் தங்கி இருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் மூலம்தான் நோய்த்தொற்று அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது.

இதையடுத்து அந்த தாய்லாந்து நாட்டினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இருப்பினும் அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இறந்த கட்டிட காண்டிராக்டரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடைய அக்கம்பக்கத்தினரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்த 2 பேர், அதாவது 45 வயதுடைய அவருடைய மனைவி மற்றும் 23 வயதுடைய அவருடைய மகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டிட காண்டிராக்டரை அருகில் இருந்து கவனித்ததால் அவருடைய மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று வந்திருக்கலாம் எனவும், தற்போது அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்