ஊத்துக்குளி அருகே உணவுபொருட்கள் கிடைக்கவில்லை என வடமாநில தொழிலாளர்கள் புகார் - தாசில்தார் பேச்சுவார்த்தை

ஊத்துக்குளி அருகே உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை என வடமாநில தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தார்.

Update: 2020-03-28 21:15 GMT
ஊத்துக்குளி, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊத்துக்குளி அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஊத்துக்குளி தாசில்தார் கார்த்திகேயன், நில வருவாய் ஆய்வாளர் ஸ்ரீநந்தினி, ஊராட்சித் தலைவர் சின்னசாமி, துணைத்தலைவர் அன்பரசு, ஊராட்சி செயலர் குருசாமி மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று அவர்கள் பணிபுரியும் பனியன் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பனியன் நிறுவன உரிமையாளர்கள் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உணவுப்பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்துசென்றனர். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கு நியாயவிலைக்கடை மூலம் பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.

இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட குமரன் ரோட்டில் எம்ஜி.ஆர் சிலை அருகே உள்ள பகுதியில் தங்கியிருந்த 32 வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் உணவு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அத்தியாவசிய பொருட்கள் தேவை என்றால் தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்