கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை - குமாரசாமி குற்றச்சாட்டு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-03-28 23:59 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொேரானா வைரசை கட்டுப்படுதத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசு கூறி வருகிறது. ஆனால் அந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் கர்நாடக 3-வது இடத்தில் உள்ளது. அந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது கர்நாடக அரசின் செயல்பாடுகளை கேள்வி எழுப்புவதாக உள்ளது. பிரதமர் அறிவித்தப்படி, கர்நாடகம் முடக்கப்பட்டு உள்ளது. அது தவிர, டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு முகக்கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்?.

கொரோனாவுக்கு எதிராக போராட தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசு கொள்முதல் செய்து இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வெறும் அறிவிப்புகள் அந்த வைரசை கட்டுப்படுத்த உதவாது. அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், கர்நாடகத்தில் மரண ஹோமம் நடைபெறும் காலம் தொலைவில் இல்லை.

1,000 செயற்கை சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்), 10 லட்சம் என்.95 முக கவசங்கள், 15 லட்சம் பிற முக கவசங்கள் வாங்குவதாக அரசு கூறி ஒரு வாரமாகிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அரசு கூறும் அனைத்து முடிவுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளதா?. வேகமாக அதிகரித்து வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த அரசு இவ்வளவு நிதானமாக செயல்படுவது சரியா?.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களே கொடுக்கவில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் பாதுகாப்பு கவசங்களை வழங்கவில்லை. அவர்களுக்கு உடனடியாக அந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்