கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனிமைப்படுத்தப்பட்ட வியாபாரி மூதாட்டி கழுத்தை கடித்து கொன்றார் - போடி அருகே பரபரப்பு

போடி அருகே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தப்பட்ட வியாபாரி, மூதாட்டி கழுத்தை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-03-28 22:15 GMT
போடி,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த 35 வயது வாலிபர், இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 21-ந்தேதி அவர் இலங்கையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள், வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த ஜவுளி வியாபாரி, கண்காணிப்பை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது திடீரென்று அவர் தனது ஆடைகளை களைந்துவிட்டு, தெருவில் நிர்வாணமாக ஓடினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள், அவரை பிடிப்பதற்காக பின்னால் ஓடினார்கள். அப்போது அந்த வியாபாரி திடீரென்று அப்பகுதியில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த நாச்சியம்மாள் (80) என்ற மூதாட்டியின் கழுத்தை கடித்து குதறினார்.

இதில் படுகாயம் அடைந்த நாச்சியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாச்சியம்மாள் நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மூதாட்டியை கடித்து குதறிய ஜவுளி வியாபாரி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். அதற்காக மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் தான் தற்போது மூதாட்டியை கடித்து குதறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த வியாபாரியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்