சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2020-03-28 22:15 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசுத்துறை நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மற்றும் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான செயல்முறை விளக்கம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.

பின்னர் அவர், இதனுடைய பயன் குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும்போது, விவசாய தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஆளில்லா குட்டி விமானம் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கிருமிநாசினி தெளிக்கும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. வாகனம் மற்றும் ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் இந்த ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கலாம்.

தரைமட்டத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறந்து சென்று கிருமிநாசினி தெளிக்க முடியும். இதில் சுமார் 10 லிட்டர் அளவு வரை கிருமி நாசினி வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கன்னங்குறிச்சி மற்றும் ஓமலூர் பேரூராட்சி பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது என்றனர்.

இதனிடையே சேலம் கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய சாலைகளில் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனம் மூலமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்