கொரோனா தடுப்பு நடவடிக்கை: தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

தென்காசி, கடையநல்லூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2020-03-29 22:30 GMT
தென்காசி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தென்காசியில் பழைய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகளும், புதிய பஸ் நிலையத்தில் இறைச்சி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலையில் இந்த கடைகளில் பொதுமக்கள் பலர் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதே நேரத்தில் மளிகை கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வீதி வீதியாக சென்று தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு நடக்கின்றன?, அரசுத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனர்?, பொதுமக்கள் எப்படி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்? என்பதை ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடாத அளவில் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதுதவிர தனியார் தங்கும் விடுதிகளுக்கு சென்று வெளியாட்கள் தங்கி இருக்கிறார்களா? என்று விசாரணை நடத்தி யாருக்கும் அவ்வாறு தங்க அனுமதிக்க கூடாது என்று கூறிச் சென்றார்.

கடையநல்லூர் 


கடையநல்லூர் நகரசபை பகுதியில் மூடப்பட்ட தினசரி மார்க்கெட், பேட்டை நகரசபை நடுநிலைப்பள்ளியில் கடையநல்லூரில் உதவி கேட்டு சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 12 பேரையும் கலெக்டர் நேற்று பார்த்தார்.

அதன் பின்னர் தற்காலிகமாக செயல்படும் 7 தற்காலிக மார்க்கெட்டுகளில் பேட்டை, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் செயல்படும் மார்க்கெட் மற்றும் தனியார் சூப்பர் மார்க்கெட், மருந்தகம் ஆகியவைகளை பார்வையிட்டார். மேலும் அங்கு நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

அப்போது கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகரசபை நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர் சேகர் ஆகியோர் உடன் சென்றனர்

மேலும் செய்திகள்