ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை

திருப்பூர் பகுதியில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக இல்லாமல் வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-03-29 22:15 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனையும் மீறி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருகிறவர்களை போலீசார் எச்சரித்து வருகிறார்கள். அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறுகிறவர்களுக்கு போலீசார் நூதன தண்டனையும் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சந்திப்பு பகுதியில் நேற்று காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக இல்லாமல் வெளியே வந்த வாகன ஓட்டிகள் 200 பேரை பிடித்து காலணிகளை கழற்ற வைத்து வெறும் காலில் அந்த பகுதியில் உள்ள சாலை தடுப்பு சுவரில் ஏறி நிற்க வைத்தனர்.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே வருவோம். மற்றவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம். அரசின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்போம் என உறுதிமொழியும் எடுக்க வைத்தனர். இந்த நூதன தண்டனையை பார்த்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பலரும் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்