மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து; மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு

மதுரையில் மருந்து மற்றும் குளிர்பானங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.

Update: 2020-03-29 21:30 GMT
மதுரை,

மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில் அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவலிங்க சாம்பபிரகாஷ் என்பவர் பிரபல குளிர்பானம் மற்றும் தலைவலி மருந்து பொருட்களின் குடோன் நடத்தி வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடோன் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை குடோனின் தரை தளத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. அதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அங்கு மருந்து தொடர்பான வேதிப்பொருட்கள் இருந்ததால் தீ பரவல் அதிகமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாண்குமார் தலைமையில் பல்வேறு இடங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. அவர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்க போராடினர். அதிலும் தீ கட்டுக்குள் வராததால் ரசாயன கலவை மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதும் அணைத்தனர். ஆனாலும் அந்த இடம் குறுகிய பகுதியாக இருப்பதால் புகை வெளியேற முடியாமல் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

புகை அதிகமாக வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியினரை போலீசார் அப்புறப்படுத்தினர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும் செய்திகள்