தர்மபுரி அரசு மருத்துவமனையில், 2 நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க 2 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2020-03-29 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிநாடுகளில் இருந்து தர்மபுரிக்கு 400 பேர் திரும்பி உள்ளனர். இவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 28 பேர் நல்ல நிலையில் உள்ளனர். மற்ற 372 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதே போன்று வெளிமாநிலங்களில் இருந்து 8 ஆயிரத்து 575 பேர் தர்மபுரிக்கு வந்துள்ளனர். அவர்களை சுகாதார துறையினர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 ஆண்களும், 64 பெண்களும் தனித்தனி அறைகளில் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் தயார் நிலையில் உள்ளது. செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி, ஜெயம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் தேவைப்பட்டால் கூடுதலாக 1500 படுக்கை வசதிகள் கொண்ட பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் செயல்பட சென்னை மருத்துவக்கல்வி இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கோவிந்தசாமி எம்.எல்.ஏ., சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், ஓய்வு பெற்ற முதல்வர் சீனிவாசராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்