கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? சேலத்தில் 25 ஆயிரம் வீடுகளில் மருத்துவ குழுவினர் பரிசோதனை

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்று சேலத்தில் 25 ஆயிரம் வீடுகளில் வசிப்பவர்களிடம் மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று பரிசோதனை நடத்தினார்கள்.

Update: 2020-03-29 22:00 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இந்தோனேசியா நாட்டில் இருந்து சேலத்துக்கு 11 முஸ்லிம் மதபோதகர்கள் வந்தனர். இவர்கள் சேலம் சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 5 மசூதிகளுக்கு சென்று மதபோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இவர்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 முஸ்லிம் மதபோதகர்கள் உள்பட 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த மதபோதகர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதபோதகர்கள் சென்ற மசூதிகளை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்ய 475 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினருக்கு நேற்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் வைத்து உரிய அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் இந்த குழுவினர் அந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி, மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:-

இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த 11 முஸ்லிம் மதபோதகர்களில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த நிலையில் முஸ்லிம் மதபோதகர்கள் சென்ற 5 மசூதிகளில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசித்து வரும் சுமார் 25 ஆயிரம் வீடுகளில் உள்ள மக்களுக்கு பரிசோதனை செய்ய 475 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் 90 டாக்டர் கள், 112 கிராமப்புற மற்றும் நகர்ப்புற செவிலியர்கள், 110 சுகாதார ஆய்வாளர்கள், 20 மருந்தாளுனர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்கு வசித்து வருபவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களும், அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்பதை பரிசோதனை செய்வார்கள். இதில், யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்