ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்

ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டதால் ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சி செய்த பெண் ரூ.1 லட்சத்தை இழந்தார்.

Update: 2020-03-30 23:00 GMT
மும்பை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில் மும்பை செம்பூரை சேர்ந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து ஆன்லைனியில் மதுபானம் வாங்க முயற்சி செய்தார்.

அவர் ஆன்லைனில் மதுபானம் கிடைக்கும் என போடப்பட்டு இருந்த ஒரு கடையின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர் முனையில் பேசியவர் வீட்டுக்கு மதுபானம் டெலிவிரி செய்ய ரூ.3 ஆயிரம் தரவேண்டும் என கூறினார். மேலும் அந்த பணத்திற்காக பெண்ணின் ஏ.டி.எம். கார்டு விவரங்களை கேட்டார்.

இதையடுத்து பெண் தனது கணவரின் ஏ.டி.எம். கார்டு விவரங்களை கூறினார். உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து பெண், செல்போனில் பேசியவரிடம் கேட்டார். அப்போது அவர், ரூ.3 ஆயிரத்துக்கு பதிலாக தெரியாமல் ரூ.30 ஆயிரம் எடுத்துவிட்டதாக கூறினார்.

மேலும் அந்த பணத்தை மீண்டும் கணவரின் வங்கி கணக்குக்கு அனுப்புவதாக கூறினார். சிறிது நேரத்தில் பெண்ணின் கணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.

அதன்பிறகு தான் நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டதை பெண் உணர்ந்தார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன் திலக் நகர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

‘‘ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி கிடையாது.

எனவே பொதுமக்கள் ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சி செய்து இதுபோல ஏமாற வேண்டாம்’’ என போலீஸ் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்