ஈரோட்டில் கொரோனா பீதியிலும் முகக்கவசம் அணிந்து திருமணம்; மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்பு

ஈரோட்டில் கொரோனா பீதியிலும் மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்ற திருமணம் நடைபெற்றது.

Update: 2020-03-30 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு குமலன்குட்டையில் நேற்று ஒரு திருமணம் நடந்தது. கொரோனா தொற்று பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பே மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட இந்த திருமணம் நேற்று மிகவும் எளிமையாக மணமகள் வீட்டில் பெற்றோர் முன்னிலையில் நடந்தது. ஈரோட்டை சேர்ந்த பி.சின்னச்சாமி-சி.சண்முக வடிவு ஆகியோரின் மகன் சி.பொன்சங்கர் மற்றும் பி.ரவிச்சந்திரன்-ஆர்.லீலாவதி தம்பதியரின் மகள் ஆர்.ராகவி ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு மார்ச் 30-ந் தேதி நடைபெறும் என்று நாள் குறிக்கப்பட்டது. பிரமாண்டமாக இந்த திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுதல் சிக்கல் இருப்பதால், மணமக்கள் குடும்பத்தினர் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று குறித்த நேரத்தில் மணமகள் வீட்டில் திருமணம் நடந்தது. மணமக்களின் பெற்றோர் மற்றும் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர். வழக்கமான சடங்கு சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி பழமையான வழக்கப்படி மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். இதுபோல் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். அரசின் எச்சரிக்கைக்கு ஏற்ப அனைவரும் கைகளை கழுவி சுத்தம் செய்தும், போதிய இடைவெளி கடைபிடித்தும் இருந்தனர்.

மேலும் செய்திகள்