தற்காலிக சந்தைகளை மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆய்வு; முக கவசங்களை இலவசமாக வழங்கினார்

ராமநாதபுரம் நகரில் தற்காலிக சந்தைகளை மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகள், பொதுமக்கள், பணியாளர்களுக்கு முக கவசங்களை இலவசமாக வழங்கினார்.

Update: 2020-03-30 22:30 GMT
ராமநாதபுரம், 

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிக்க மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இதையடுத்து ராமநாதபுரத்தில் 2 இடங்களில் தற்காலிக சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று காலை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. வும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் புதிய பஸ் நிலையம் மற்றும் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைகளுக்கு சென்று பார்வையிட்டார்.

அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு முக கவசங்களையும், கிருமிநாசினி களையும் இலவசமாக வழங்கினார்.

தொடர்ந்து எம்.எல்.ஏ. கூறியதாவது, மக்களின் நலனுக்காகவே, மக்களை காப்பாற்றவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு காய்கறிகள் உள்ளிட்ட உணவுபொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நலனுக்காக எடுக்கப்பட்டு வரும் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து ராமநாதபுரம் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் அரசு மருத்துவமனை சாலையில் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் நவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியை பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது நகரசபை ஆணையாளர் விசுவநாதன் உள்பட வருவாய்த்துறையினர், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்