கர்நாடகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரிப்பு

கர்நாடகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-03-30 23:57 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை அந்த வைரசுக்கு 80 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று மேலும் 8 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர ஏற்கனவே 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதிதாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் விவரம் வருமாறு:-

13 வயது மகன்

துமகூருவில் மரணம் அடைந்த 60 வயது முதியவரின் 13 வயது மகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் 32 வயது, 34 வயது, 21 வயது, 24 வயது நிரம்பிய 4 வாலிபர் களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இவர்கள் 8 பேரும் மைசூரு, பல்லாரி மற்றும் துமகூரு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூய்மையான உணவு

கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகளில் உள்ளவர்களை வெளியேற்றக்கூடாது. அவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாட்களிலும் தூய்மையான உணவு வழங்க வேண்டும். கர்நாடக அரசின் இணையதளத்திற்கு சென்று, கொரோனா கண்காணிப்பு தொடர்பான செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று வந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்