கொரோனா பாதிப்பு: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்களின் பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2020-03-31 05:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக திறக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளை நாகை தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாவட்ட சித்த மருத்துவமனையில் கபசுரகுடிநீர் இலவசமாக வழங்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முடங்கி போய் உள்ளது. இந்த நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது. பிரதமர் நிவாரண நிதியை அள்ளி தரும்படி தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் டாடா குழுமம் ரூ.1,500 கோடி வழங்கியுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரத்தை ஈடுகட்டும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு இதுவரை கொரோனா வைரஸ் ஆய்வுக்கு 23 பேர் வந்துள்ளனர். இதில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 130 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் இலவசமாக கபசுரகுடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக எனது தொகுதி நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்