புதுக்கோட்டை பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்

புதுக்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

Update: 2020-03-31 08:46 GMT
புதுக்கோட்டை,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அரசு பஸ்கள், அந்தந்த போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 50-க்கும் மேற்பட்ட டவுன் மற்றும் புறநகர் பஸ்கள் தனித்தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் பணிமனையில் புறநகர் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள இடத்தில் ஒரு அரசு பஸ் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பணிமனை பணியாளர்கள் இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கும், புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் செழியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 2 வாகனங்களில் போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து, எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. மேலும் தீப்பிடித்த பஸ்சின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 அரசு பஸ்களின் முன்பக்க கண்ணாடியும், 2 பஸ்களின் பின்பக்கமும் சேதமடைந்தன.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ‘எலக்ட்ரிக் ஸ்டார்ட்’ காரணமாக பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்