கொரோனா வைரஸ் உதவித்தொகை: ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ.1000 வழங்கப்படும் - கலெக்டர் ஷில்பா தகவல்

கொரோனா வைரஸ் உதவித்தொகையாக பொதுமக்களுக்கு ரூ.1000 ரேஷன் கடைகளில் நாளை முதல் வழங்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-03-31 23:00 GMT
நெல்லை, 

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் உதவித்தொகையாக அரிசி வாங்குகிற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000-ம் வழங்கப்படும் என்றும், அந்த ரேஷன் கார்டிற்கு தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சீனி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்து உள்ளார்.

இந்த நிவாரண தொகையை ஸ்மார்ட் கார்டு மூலம் அனைவருக்கும் நாளை (வியாழக்கிழமை) முதல் ரொக்கமாக வழங்கப்படும். இதில் பெயர் உள்ளவர்கள் யாராவது சென்று வாங்கி கொள்ளலாம். அந்த அட்டை இல்லாத இனங்களில் அவர்களின் கார்டில் பெயர் உள்ள நபர்களின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு ஒரு முறை மட்டும் வருகின்ற கடவு சொல் அடிப்படையிலோ உதவித்தொகை வழங்கப்படும்.

சுழற்சி முறையில்

இந்த தொகை ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. எந்த பகுதிக்கு எப்போது வழங்கப்படும் என்ற விவரம் கடைகளில் ஒட்டப்படும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சென்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நிவாரண தொகை மற்றும் இலவச பொருட்களை பெறுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் www.tne-pds.gov.in/tne-pds app என்ற வலைத்தளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்