மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

திருவொற்றியூரில் மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-03-31 23:10 GMT
திருவொற்றியூர், 

திருவொற்றியூர் விநாயகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 37). இவர், சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரபத்திரன், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாக மது குடிக்க முடியாமல் விரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாட்டுமந்தை மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த வீரபத்திரன், திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான வீரபத்திரனுக்கு உஷா என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளனர்.

மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்