அத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300 பேர் வெளியூர் சென்றனர் - அதிகாரிகள் தகவல்

அத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300 பேர் வெளியூர் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2020-03-31 22:45 GMT
கோவை, 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரெயில் மற்றும் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கோ செல்ல முடியாத நிலை உள்ளது.

துக்க நிகழ்ச்சி, உடன் பிறந்தவர்கள் திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியூர் செல்ல அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து இருந்தது. அதன்படி வெளியூர் செல்ல அனுமதி வேண்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஏராளமானோர் குவிந்தனர்.

கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பொய்யான காரணங்கள் கூறி யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக உரிய காரணங்களை ஒவ்வொருவரிடம் தனித்தனியாக கேட்டு, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதிகபட்சம் 4 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திருமணம் என்றால் திருமண பத்திரிகையை ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும், இறப்பு என்றால் உண்மையான விவரம், மருத்துவ காரணம் என்றால் உரிய சான்றிதழ் உள்ளிட்டவற்றை பார்த்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்துக்கு செல்ல வேண்டும். எத்தனை நபர்கள்?, அவர்களின் பெயர் விவரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு கடிதம் கொடுக்கப்படுகிறது. செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கிருந்து வர வேண்டுமானால் அந்த மாவட்ட கலெக்டரிடம் இருந்துதான் அனுமதி பெற வேண்டும்.

அந்த வகையில் கோவையில் இருந்து அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியூர்களுக்கு செல்ல அனுமதி கடிதம் பெற வந்தவர்களிடம் கலெக்டர் ராஜாமணி நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 300 பேர் இதுபோன்ற அனுமதி கடிதம் பெற்று அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியூர் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறப்பு, நெருங்கிய உறவினரின் திருமணம், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு செல்ல அனுமதி கடிதம் பெற வரவேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்