கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு எதிரொலி: நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம் - பண்ணையாளர்கள் கலக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

Update: 2020-03-31 22:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் கடந்த ஒரு மாதகாலமாக முட்டை மற்றும் கறிக்கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்தது.

எனவே பண்ணையாளர்கள் நாமக்கல் சுற்று வட்டார பகுதி மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள குளிர்பதன கிடங்கில் முட்டைகளை இருப்பு வைத்தனர். மேலும் ஒரு முட்டைக்கு ரூ.2 வீதம் நஷ்டம் ஏற்பட்டதால் பண்ணையாளர்கள் கோழிகளுக்கு தீவனம் போடுவதை நிறுத்தி கொண்டனர். சிலர் பாதி அளவு மட்டுமே தீவனம் போட்டு வந்தனர். இதன் எதிரொலியாக முட்டை உற்பத்தி ஏறத்தாழ 1 கோடி சரிவடைந்தது.

முட்டை உற்பத்தி குறைவு மற்றும் கொள்முதல் விலை சரிவு போன்ற காரணங்களால் முட்டையின் தேக்கம் சற்று குறைந்து அதன் கொள்முதல் விலை உயர தொடங்கியது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இது கோழிப்பண்ணையாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். எனவே தினசரி உற்பத்தியாகும் முட்டைகளை முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

தற்போது நாள் ஒன்றுக்கு நாமக்கல் மண்டலத்தில் 2½ கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் 2 கோடி முட்டைகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்டாலும் தினசரி 50 லட்சம் முட்டைகள் வீதம் தேக்கம் அடைந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா தொடர்பான வதந்தியால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6½ கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருந்தன. தற்போது ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு 3½ கோடி முட்டைகள் என மொத்தம் 10 கோடி முட்டைகளுக்கு மேல் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டையின் கொள்முதல் விலையை 335 காசுகளாக நிர்ணயம் செய்து உள்ளது. இருப்பினும் பண்ணைகளில் 250 காசுகளுக்கே வியாபாரிகள் முட்டைகளை வாங்குவதாக பண்ணையாளர்கள் குற்றம்சாட்டினர்.

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டைகள் தேக்கம் அடைந்து வருவதால் கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்