டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

Update: 2020-04-01 21:45 GMT
திருப்பத்தூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூர் நகராட்சி சார்பில் திருப்பத்தூர் நகர காவல்நிலைய கூட்ரோடு முதல் ஆலங்காயம் ரோடு சின்ன கடை தெரு பெரிய கடைத்தெரு பகுதிகளில் ஜேட்ரான் மூலம் லைசால் கரைசல் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்தார். மேலும் திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் நடந்துசென்று கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 814 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 23 பேர் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் பலரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வேண்டிய நிதி தமிழக அரசு வழங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கலெக்டர் சிவன்அருள், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் லீலா சுப்பிரமணியம், சங்கர், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் ஆயோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்