நாமக்கல் மாவட்டத்தில் ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரும் நலமுடன் உள்ளனர்’ - அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 18 பேரும் நலமுடன் இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2020-04-02 04:50 GMT
நாமக்கல்,

டெல்லியில் முஸ்லிம்கள் நடத்திய மாநாட்டிற்கு சென்று திரும்பிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி மாநாட்டுக்கு சென்று நாமக்கல் திரும்பிய 18 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகி உள்ளதால், அவர்களுக்கு நாமக்கல், ராசிபுரம் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை.

நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் அரசு மருத்துவமனைகள் முழுமையாக கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. பொது சிகிச்சைக்காக வருபவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கும் பொது சுகாதாரத்துறை மூலம் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் இதுவரை தகவல் தெரிவிக்காதவர்கள், அவர்களாக முன்வந்து தகவல் தெரிவித்தால் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்படும்.

கொரோனா வைரஸ் சம்பந்தமாக இனியும் நோயாளிகள் வந்தாலும் அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,850 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அங்கு வருபவர்களுக்கு மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்களை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். அவர்கள் வசிக்கும் பகுதியில் வெளிநபர்கள் செல்ல தடை செய்யப்பட்டு இருப்பதால், அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றோம்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண உதவித்தொகை ரூ.1,000 மற்றும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும். மேலும் நடமாடும் காய்கறி கடைகளை திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் ஏற்படுத்தி உள்ளோம். மருத்துவர்களுக்கு தேவையான முக கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்