ஆத்தூர், திருச்செந்தூரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு

ஆத்தூர், திருச்செந்தூர் ரேஷன் கடைகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-04-02 22:45 GMT
ஆறுமுகநேரி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதுடன், இந்த மாதத்துக்கான (ஏப்ரல்) அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, கோதுமை போன்ற அனைத்து உணவுப்பொருட்களையும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்குகிறது.

இந்த நிலையில் ஆத்தூர்-புன்னக்காயல் ரோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு, வரிசையில் நின்று உதவித்தொகை, உணவுப்பொருட்களை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர், தன்னார்வலர்கள் மூலம் முதியோர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று உதவித்தொகை, உணவுப்பொருட் களை வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

திருச்செந்தூர்

தொடர்ந்து திருச்செந்தூர் கீழ ரத வீதி ரேஷன் கடையிலும் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் கோபால், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னுலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் தென்திருப்பேரை அருகே கேம்பலாபாத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். ஏரல் தாசில்தார் அற்புதமணி, ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர்கள் கருப்பசாமி, பாக்கிய லீலா, கிராம நிர்வாக அலுவலர் செந்தாரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்