நாகை மாவட்டத்தில் இதுவரை தடை உத்தரவை மீறிய 1,080 பேர் மீது வழக்கு - 710 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் இதுவரை தடை உத்தரவை மீறிய 1,080 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 710 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு கூறி உள்ளார். இது குறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-04-02 21:45 GMT
நாகப்பட்டினம்,

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட 144 தடைசட்டத்தை அமல்படுத்தும் வகையில் நாகை மாவட்டம் முழுவதும் 1 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 9 துணை போலீஸ் சூப்பிரண்டு, 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியில் உள்ளனர்.

இது தவிர 290 ஊர் காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நாகை மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் 55 வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தடை உத்தரவை மீறியதாக மாவட்டம் முழுவதும் இதுவரை 1,080 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 710 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 15 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மது விலக்கு சோதனையின் போது இதுவரை 223 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து நாகை மாவட்டத்துக்கு வந்தவர்களில் 2 ஆயிரத்து 696 நபர்கள் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாநில அரசு எடுக்கும் முயற்சிக்கு நாகை மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டத்தை மீறி தேவையில்லாமல் சாலைகளில் அலைந்து திரிபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல மணல்மேடு பகுதியில் ஊரடங்கை மீறி டீக்கடைகள் திறக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை மீறி டீக்கடைகளை திறந்து வைத்ததாக டீக்கடை உரிமையாளர்கள் திருவாளப்புத்தூர் வாணியர் தெருவை சேர்ந்த குப்புசாமி (வயது68), கடக்கம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (49), திருவாளப்புத்தூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த முனியய்யா (37), தலைஞாயிறு மதகடி மெயின்ரோட்டை சேர்ந்த லோகநாதன் (43), பட்டவர்த்தி இளந்தோப்பு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்த 140 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்